சனி, 14 நவம்பர், 2009

லா ஸ்ட்ராடா (La STRADA)

la strada
உலகப்புகழ்பெற்ற படங்கள் பார்ப்பதற்கு / ஆங்கிலஅறிவோ அறிவிஜீவித்தனமான மண்டையோ வேண்டும் என்கிறதில்லை. பொறுமையும், படத்தை உள்வாங்கிக் கொள்கிற பக்குவமும், (ஆங்கிலம் தெரிந்திருந்தால் இன்னும்கொஞ்சம் ஆழமாக வசனங்களை உள்வாங்கிக்கொண்டு ரசிக்கலாம்) கொஞ்சம் சினிமாசார்ந்த தேடலும் இருந்தாலே போதும்.
இப்படித்தான் நான் வாங்கிவைத்திருக்கிற 150 படங்களில் ஒருசிலதையாவது பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவலில், எதையாவது பார்ப்பது என்றில்லாமல்/ குறைந்தது / நாம்பார்க்கின்ற படத்தின் கதையையாவது தெரிந்துகொண்டு படம் பார்க்கலாம் என்று நினைத்து, செழியனின் உலகப்படங்கள், எஸ்.ராமகிருஷ்ணனின் உலகப்படங்கள் சார்ந்த தொகுப்பு, எம்.ஜி.சுரேஷின் உலகம் போற்றும் திரைப்படங்கள் என சிலபுத்தகஙகள் சிலதை கையிலெடுத்துக் கொண்டு / புறப்பட்டேன்… இல்லையில்லை படம்பார்க்கத்தயாரானேன். மூன்று புத்தகங்களிலிருந்து தேர்வுசெய்து / 20 படங்களைத்தேர்வுசெய்து தினமும் ஒருபடம்வீதம் பார்ப்பதாகத்திட்டம்……
அப்படிதேர்வுசெய்யப்பட்டதில் முதல்படமாக அமைந்ததுதான்… லா ஸ்ட்ராடா (சாலை) 1954ல் பிரெடிகோ பெலினி எனும் இத்தாலிய இயக்குநரால் எடுக்கப்பட்ட நியோரியலிஸ்ட் வகையான படம். ஊர்ஊராக தனது மூன்றுசக்கர வாகனத்திலேயே சென்று சர்க்கஸ்காட்டிப்பிழைக்கும் ஜம்பனோ (ஆண்டனி க்வின்)வுடன் உதவியாளினியாக வருகிறாள், வயதுமுதிர்ந்தும் சிறுபிள்ளைத்தனமான மனோநிலையில் இருக்கும் ஜெல்ஷோமினா (ஜியுலெட்டா மாசினா…. இப்படத்தின் இயக்குநர் பிரெடிரிகோ பெலினியின் மனைவி) முரட்டுத்தனமான / சிர்க்கக்கூட காசுகேட்கும் கதாநாயகன்… அவனின் ஒவ்வொரு சின்னச்சின்ன செயல்களையும் கூர்ந்து கவனிக்கும் / ஏதோவொரு அவன்மீதான பிடிமானத்துடன் இருக்கும் நாயகி… இடையில் வில்லன் போல் வந்துசேர்கிற சர்க்கஸ்காரன் (ரிச்சர்ட் பேஸ்ஹ‌ார்ட்) என ஒரு சில கதாபாத்திரங்களுடன் நகர்ந்துசெல்லும் கதை…. இப்போது வேண்டுமானால் இவையெல்லாம் சாத்தியப்படலாம். 1950களின் பிற்பகுதியில் எடுக்கப்பட்ட படம்…. அற்புதமான பாத்திரப்படைப்புகள். கதையுக்தி. சர்க்கஸ்காரனை கோபத்தில் கதாநாயகன் அடித்துவிடுவான். எதேச்சையாக அவன் சுருண்டுவிழுந்து இறந்துபோவான்…. அதன்பின்னான… காட்சிப்பதிவு… அதுகாட்டுகிற மொட்டைமரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதி… வேகம்… என ஒரு விசை நம்மையும் (நம்மையறியாமலேயே) இழுத்துச்செல்லும். கதைநாயகியின் நடிப்பு.. வார்த்தைகளற்ற கவிதை. சிறிது மனம் பேதலித்தவளாயினும்… அவளுக்குள் இருக்கிற மென்மையான மனசு… சர்க்கஸ்காரனுடனான மெல்லப்பூக்கும் நேசம்(காதலல்ல) அவனால் அன்பளிக்கப்படுகிற டாலரை மாட்டுகிறபோதும், கூலாங்கல்லை வாங்குகிறபோம்… அவன் கொல்லப்படுகிபோது(நேரில் பார்த்து) பதறிப்போகிற போதும்… அதைநினைத்தே அழுதுஅழுது… நீ அவனைக்கொன்றுவிட்டாய் என தூக்கத்தில் புலம்பி… அப்பிரானியாக படுத்துறங்குகிறபோதும்… பபூனாக வேடமிட்டு கழைக்கூத்தில்.. கூத்தடிக்கிறபோதும்… என… நாயகனைக்காட்டிலும் நாயகியின் நடிப்பு நெகிழவைக்கிறது. விலைமாதுவிடம் நாயகன் கொஞ்சிக்குலாவும் போது உள்ளூர.. ஒரு ஆதங்கத்துடன் நெகிழ்கிற காட்சியும்.. நான்திரும்பவும் என்வீட்டிற்கே போகிறேன் என நாயகனிடம் வாதிடுகிற காட்சியும்… மனவெளிப்பாடு. நாயகனால் கைவிடப்பட்ட நாயகி, இறந்துவிட்ட செய்தியறிந்து/ நாயகன் படும் பாடுதான் படத்தின் உச்சகட்டம். முரட்டுத்தனமான அவனுள்ளும் இளகிய மனம் எப்படிவெளிப்படுகிறது… என்பதை நடிகரும்… அதை இயக்கிய இயக்குநரும் அற்புதமாக செய்திருக்கிறார்கள். 90 சதவீதக்காட்சிகள் வெளிப்புறத்திலேயே படமாக்கப் பட்டிருக்கின்றன. கருப்பு வெள்ளைப்படமாதலால் அதற்கேற்ப ஒளியமைப்புகள் பிரமாண்டப்படுத்தியது. விக்டோரியா டிசிகாவின் பைசைக்கில் தீப் நிறையமுறை பார்த்திருக்கிறேன்.. அதைக்காட்டிலும் இது புதிதுபுதிதாக வெவ்வேறு செய்திகளைச் சொல்லுவதுபோல் எனக்குத்தோன்றின. கிட்டத்தட்ட நான் பிறப்பதற்குமுன்பே வெளிவந்த ஒருதிரைப்படம்…. இவ்வளவு வருடம் கழித்து இப்போதான் நம்பார்வைக்கு வருகிறதென்றால் (நாம் தேடிப் போகாதது நம்குற்றமே) இன்னும் வெகுமக்களை இப்படியான படங்கள் சென்றுசேர்வதெப்போதோ… தெரியவில்லை. திரைப்படச்சங்கங்கள் இப்படியான படங்களை (கதைவிளக்கத்துடன்) திரையிட்டு / படம்குறித்து விவாதித்து மேலும் திரைப்பட ரசனையை மேம்படுத்தவேண்டும். அப்போதுதான் மாற்றுத்திரை எனும் வடிவம் வலுப்பெறும்….
(சில புரிதலுக்காக…..நன்றி.. எம்.ஜி.சுரேஷ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக