சனி, 28 ஆகஸ்ட், 2010

வினயா ஒருபெண் காவலரின் வாழ்க்கைக்கதை/நூலரங்கம்



நளினிஜமீலா நிகழ்ச்சியன்றே திட்டமிட்டது தான் வினயாவின் நூல் குறித்த அறிமுக நிகழ்வை திருப்பூரில் நடத்தவேண்டும் என்று. இரண்டுமூன்று மாதங்கள் கழித்து வைத்துக்கொள்ளலாம் என்பதும் முன்னமே முடிவானதுதான்.
(பொருளாதாரப் பிரச்சனை தான்) கிட்டத்தட்ட ஜூன் முதல்வாரமே கோழிக்கோடில் உள்ள வினயாவிடம் பேசினோம் ( மொழிபெயர்ப்பாளர் யூசுபிடம் கைபேசி எண்வாங்கி) வருவதாக ஒப்புக்கொண்டார்கள். அதேபோல் தமிழ் மொழி பெயர்ப்பாளரையும் அழைப்பதென்று அவரிடமும் பேசினோம். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டார். அப்புறம்தான் தேதியும், இடமும் உறுதியானது. இந்த நேரத்தில் த.மு.எ.க.ச. ஈஸ்வரனையும் நன்றியுடன் குறிப்பிடவேண்டும். இப்படியான ஒரு நிகழ்விற்கு ஏற்பாடுள்ளது. முடிந்தால் உங்கள் ( கே.ஆர்.சி.சிட்டிசென்டர்) இடத்தைக் கொடுங்கள். அல்லது குறைந்த வாடகைக்கு ஒரு,இடத்தை பரிந்துரைசெய்யுங்கள் என்று கேட்டபோது, இரண்டொரு நாள் கழித்து நம்ம இடத்திலேயே வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அப்பாடா.... அரங்கிற்கான பெரும் செலவுகுறைந்தது என்று மகிழ்ந்தோம். அடுத்து சென்னை வழக்கறிஞர் வடிவாம்பாள்(த.ஓ.வி.இ) பொள்ளாச்சி ஆசிரியை மணிமுத்து என ஒவ்வொருவரையம் உறுதிப்படுத்தினோம். துண்டறிக்கை தயாரானது. நீண்டநாளாகிவிட்டமையால் நிகழ்வன்றே பதியம் இதழையும் கொண்டுவந்துவிடலாம் என்ற மருத்துவர் சண்முகநாதனின் யோசனையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகளும் துவங்கியது. இதற்கிடையில் மகேஸ்வரி புத்தக நிலைய மகாதேவன் நிகழ்வில் தன்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று 2000ரூபாய் தந்தார். பதியம் / மகேஸ்வரி புத்தக நிலையம் இணைந்த நிகழ்வாகவே ஏற்பாடுகள் நடைபெற்றன. கிட்டத்தட்ட நிகழ்வின் ஒருபகுதி செலவை மருத்துவரும் ஒருபகுதி செலவை நானும் ஏற்றுக்கொள்வதாக முடிவானது. (யாரிடமும் காசுகேட்பதான திட்டமில்லை. கேட்டாலும் தருணுமே) தோழர் தமிழ்நேயன் வாயிலாக எதிர் பதிப்பகத்திலிருந்து ( வினயாவின் புத்தகம் எதிர் வெளியீடு) 10 புத்தகம் வாங்கி வந்திருந்தார். அதை, வாசிக்கிற நண்பருகளுக்கு கொடுத்து (காசுக்குத்தான்) படித்துவிட்டு நிகழ்விற்கு வர பணிந்திருந்தோம். நல்ல வரவேற்பிருந்தது. படித்துவிட்டு புளகாகிதமடைந்தனர் சிலநண்பர்கள் °உண்மையிலேயே ஒரு நல்ல நிகழ்வைத்தான் திட்டமிட்டிருக்கிறீர். அற்புதமான சுயசரிதைநூல். ஒருபெண் காவலரின் கதை... துறைசார்ந்து அவர்கள் எதிர்கொண்ட போராட்டமென தமிழில் நினைத்தும் பார்க்கமுடியாத/ மலையாளத்தில் மட்டுமே சாத்தியப்படுகிற விசயமிது° என்று கூறினர். நிகழ்ச்சியின் வெற்றி அன்றே தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக உணர்ந்தோம்.
அதிலும் கூட சில நண்பர்கள் °அதென்னங்க கேரளாவிலிருந்தே அதுவும் பெண்களாகவே அழைத்துவந்து புத்தக அறிமுகவிழா நடத்துகிறீர்? ° என்றும் கேட்டனர். நல்ல வித்தியாசமான படைப்புகள் எங்கிருந்தாலும் அறிமுகப்படுத்த வேண்டியதுதானே சரி என்றோம்.
18.07.10 ஞாயிறு மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி. யூசுப் தவிர்க்கமுடியாத காரணத்தால் வரஇயலவில்லை என்று முன்னமே கூறிவிட்டிருந்தார். சனிக்கிழமை இரவே வினயா, அவரது தோழிகள் மரியா, லிசி ஆகியோர் வந்துவிட்டனர். அவர்களை விடுதியில் தஙகவைத்தோம். காலை அவர்களுடனே காலை சிற்றுண்டி. வினயாவும், லிசியும் மலையாளத்திலும், மரியா ஓரளவிற்கு தமிழிலும் உரையாட.... நான் தமிழிலேயே அவர்களுடன் கதைச்சேன். திருப்பூர் குறித்தும், இங்கு வந்து தங்கி பனியன் கம்பனிகளுக்கு பணிக்குச்செல்லும் பெண்கள் குறித்தும், அவர்களுக்கான °பாதுகாப்பு° குறித்துமான நிறைய விசயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். (என் தமிழ் அவர்களுக்கும், அவர்களின் மலையாளம் எனக்கும் புரிந்திருந்தது. ஆனால் நாங்கள் அனைவருமே த்த்தமது மொழிகளில் பேசிக்கொண்டோம்.)
சிற்றுண்டி முடித்து என் அலுவலகம் வந்தோம். வந்ததும் மரியாவும், வினயாவும் எனது நூலகத்தில் புத்தகங்களை ஆர்வமுடன் பார்வையிட ஆரம்பித்தனர். ( குறிப்பாக கவிதாசரண் வெளியிட்டிருந்த முத்துக்குமாரின் மொத்த கவிதைத்தொகுப்பை ஆர்வமுடன் எடுத்துச்சென்றனர்,காசுகொடுத்து.) முத்துக்குமார் குறித்தும், அவனது ஈழத்திற்கான ஈகம்குறித்தும் நான் கூறியிருந்தது அவர்களை ஈர்த்திருக்கவேண்டும். அதில்ஆர்வமாகிவிட்டனர். மரியா கொஞ்சம் தமிழ்படிப்பாராம். வினயா முயற்சித்துக்கொண்டிருக்கிறார். பதியம் வெளியீடுகளையெல்லாம் அன்பளித்தேன். பின் திருப்பூரை சுற்றிப்பார்த்து விட்டு மாலை நிகழ்விற்கு வந்துவிடுவதாகச் சொல்லிச்சென்றனர்.
நல்ல முதிர்ச்சியான பெண்ணாகத்தான் பரிணமித்தார் வினயா. நிறைய பொதுவிசயங்கள் குறித்து பேசுகிறார். பெரிய அரசியல் பார்வை இல்லையெனினும் பெண்கள் குறித்தான, அதுவும் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்தான செய்திகள் தான் நிறைய உள்வாங்கியிருக்கிறார். ஆணகளுக்கு நிகரான அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் என்பதே அவரின் போராட்டமாக இருக்கிறது. நீ பேன்ட் சர்ட் அணிந்தால் நானும் அணிவேன். நீ புகைபிடித்தால் நானும் பிடிப்பேன். நீ மதுஅருந்தினால் நானும் மது அருந்துவேன். அதென்ன உனக்கு மட்டும் ஒரு நியாயம் எனக்கு ஒருநியாயமா... என்பதாகத்தான் இருக்கிறது. மருத்துவர் சண்முகநாதன் சொன்னதுபோல, எந்தவொரு தத்துவார்த்தங்களுக்குள்ளும் சிக்காமல், பெண்ணியம் குறித்து அக்கறைப்படும் ஒருவராகத்தான் அவர் இருக்கிறார்.
மாலை மணி 6 ஆகிவிட்டிருந்தது. புத்தகம் குறித்துபேசுபவர்களைத்தவிர பார்வையாளர்கள் வேறுயாருமே இல்லை. சண்முகநாதன் °என்னங்க, மக்கள் வந்துருவாங்களா?° என்றார். கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது. இவ்வளவு நல்ல ஒருநிகழ்வு. 100 நூல் அஞ்சல் அழைப்பு, 75 அஞ்சலட்டை அழைப்பு, 200 குறுஞ்செய்தி அழைப்பு, 100 சுவரொட்டிகள், உள்ளூர் பத்திரிகையின் இன்றைய நிகழ்ச்சி செய்தி, 50 கைபேசி அழைப்பென.... இவ்வளவு பண்ணியும் மக்கள் வரவில்லையென்றால்... பயம்கொஞ்சம் தொற்றிக்கொள்ள, °எவ்வளவுபேர் வந்தாலும் சரி 6.30 மணிக்கு நிகழ்வைத் துவங்கிவிடவேண்டியது தான்° என்று சொல்லிவிட்டு, காத்திருந்தோம். 6.30க்கு நிகழ்ச்சி துவஙகும்போது 50 பேர் இருந்னர். துவங்கி அரைமணிக்குள் மக்கள் வரத்துவங்கினர். மணிமுத்து தலைமையேற்றார். செந்தில்முருகன் வந்தவர்களை வரவேற்றார். சண்முகநாதன், வழக்கறிஞர் வடிவாம்பாள், இளங்கோவன், சிவகாமி, இளஞாயிறு, ஜெனீபர் உள்ளிட்டோர் °வினயா/ஒரு பெண்காவலரின் வாழ்க்கைக் கதை° நூல்குறித்த தங்களின் பதிவுகளை பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சியின் இடையே பெரியவர் ஒருவர் என்னை அழைத்து 7,30 மணிவரை அவரை(வினயா)ஆண் என்றே நினைத்துவிட்டேன் என்றார். (வினயா அணிந்திருந்த உடை, பேண்ட், சர்ட், மற்றும் ஆண்கள் போலவே தலைமுடியும் வெட்டியிருந்தார்) சிரித்துக்கொண்டேன்.
நிகழ்வின் இறுதியாக நான் வினயாவை அறிமுகப்படுத்தி வைக்க, வினயா சிறிதுநேரம் மலையாளத்தில் பேசினார். அவர் சந்தித்த பிரச்சனைகள், அதற்காக காவல்துறையில் உள்ள ஆண்களால் பட்ட அவமானங்கள், எதிர்கொண்டவிதம், என பகிர்ந்துகொண்டார்.( மரியா தமிழில் மொழிபெயர்த்துக்கூறினார்) தொடர்ந்து, கலந்துரையாடல்.
நீங்கள் ஏன் ஆண்கள்போல உடையணிந்து, முடிவெட்டியிருக்கிறீர்கள்? ( அந்த பெரியவரே தான்)
அது என் இஷ்ட்ம். என்ன உடையணிய வேண்டும் என்பதை தீர்மானிப்பவள் நான் தான். நீங்களல்ல( ஆண்களல்ல) வினயா ஒரு காவலர் என்றால், அது குறித்து மட்டும் பாருங்கள். அவள் என்ன உடையணிந்திருக்கிறாள், என்ன உடையணிய வேண்டும் என்பதெல்லாம் உங்களுக்கு (ஆண்களுக்கு)வேண்டாத வேலை. இப்படியாக கலந்துரையாடல் போய்க்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 150 பேர். நிறைவான கூட்டம். அவர்களுக்கும் நிறைவு. முதன்முறையாக இந்த புத்தகம் குறித்தான நிகழ்வு, தமிழகத்தில் இதுதான் என்று நன்றி பாராட்டினர். மகிழ்வாக இருந்தது. ஒரு நல்ல புத்தகத்தை/ படைப்பாளியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்கிற மன நிறைவுடன் அறைக்குத்திரும்பினோம். எதிரில் தோழர் தமிழ்நேயனுடன் வினயா சிகரெட் பிடித்தபடி வந்துகொண்டிருந்தார். அதிர்ச்சியெல்லாம் ஒன்றுமில்லை. °மன்னிக்கணும். அப்படியே ரிலாக்ஸாக வெளிவந்தோம். ஒரு தம் அடிக்கலாமென்று° என்றார், வினயா.
°நீங்க மன்னி்க்கணும். நாங்க ரிலாக்ஸா பீர் சாப்பிட்டுவிட்டு வந்தோம்° சண்முகநாதன்.
சிரித்துக்கொண்டே கைகுலுக்கிக்கொண்டோம். அன்பும், நன்றியும் வாழ்த்தும், தோழமையும் சமபகிர்தலும் நிரம்பிவழிந்தன கைகுலுக்களில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக