வெள்ளி, 23 அக்டோபர், 2009

இடம்பெயர்தல் குறித்து…

பக்கத்துவீட்டு துளசியம்மாளின்
அழுகை ஓலம்-
குடிபோதையின் உச்சமாய்…
“நீயும் போறயாடா வாசா…”
கணவன் இறந்து
இரண்டாண்டுகள் கடந்துவிட்டன.
பெத்தது ஐந்தும் பெண்கள்.
கட்டிக்கொடுத்தாச்சு ஐந்தையும்.
வாகனத்தில் ஏற்றப்பட்ட
வீட்டுச்சாமான்களுடன்
கனத்த மன நிலையில்
காது கேளாதவனாய்..
நின்றிருக்கிறேன் நான்.
இரவுநேர கும்மிருட்டு
என்னைக்காட்டிக்கொடுக்காமல்
காப்பாற்றியது,
துளசியம்மாளிடமிருந்து.
மணவிழாக்களில்
மணமகளும் – பெற்றோரும்
கண்கலங்குவது கண்டு
கிண்டலடித்திருக்கிறேன்.
முதல்நாள் பள்ளிவரும்
தாய்மடியிறங்கா
மழழையின் பிரிவுத்துயர் -அழுகைகூட
பாதித்ததில்லை என்னை.
முப்பதாண்டுகளாக
நான் வசித்த அந்த வீடு…
அப்பாவின் மரணம் தராத துயர்
வீடு தந்தது எனக்கு.
வீடுமாற்றுகிற மகிழ்வில்
மனைவியும் குழந்தைகளும்.
வெளிப்படுத்தவியலாத துக்கத்தில்
நானும் என் இருப்பும்.
பொருட்கள் ஏற்றப்பட்டு
புறப்படத்தயாரானது வாகனம்.
“போறயேடா போறயேடா…
என்னெவிட்டு போறயேடா…
நானும் போறம்போ.. “
போதையின் உச்சமா…
பிரிவின் வலியா..
தெரியவில்லை.
எத்தனையோ நாட்களில்
அம்மாவின் சண்டைக்காரியாகவும்
அவ்வப்போது பாசக்காரியாகவும்
கணவனை இழந்த துக்கமே
காரணமாய்..
குடியுடன் கலந்த
துளசியம்மாளின் புலம்பல்..
மெல்ல மெல்ல வீரியமிழந்தது.
காலிசெய்யப்பட்ட வீட்டின் அறைகளை
கடைசியாய் ஒருமுறை
பார்க்க எத்தனித்தேன்.
அறைகள் ஒவ்வொன்றும்
அன்பொழுக என்னை… “வா வா” என்றது.
‘அகறிணையும் அழுமா’ வென
அப்போதுதான் தெரிந்தேன்.
கழிவறை சென்று பத்துநிமிடம்
கண்மூடி அமர்ந்திருந்தேன்.
அமர்ந்திருந்த பொழுது
அழுதிருந்தேன் என்று
அப்போது தெரியவில்லை.
வினாடிகளில் வெளியேறி
வேகமாய் வாகனம் வந்தேன்.
புதுவீடுவந்து / களைப்புடன் படுத்தும்
உறக்கமின்றி விடியும்வரை
விட்டம் வெறித்தேன்.
எப்பவுபோல் சூரியன்
கிழக்கிலிருந்து மேலெழுந்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக