திங்கள், 19 அக்டோபர், 2009

பேராண்மை - ஒருபுதிய அனுபவம்

பொதுவாகவே திரைப்படங்களின்பால் அதிகம் விருப்பமில்லாத எனக்கு(காரணம் ஒன்றுமில்லை. வணிகப்படங்கள், கலாசாரச் சீரழிவுமிக்க படங்கள், என குப்பைகளே மிகுதியாகிப்போனதனால்) ஜனநாதனின் பேராண்மை பார்க்கவேண்டும் என்று தோன்றியதற்கு பலவேறு கரணங்களுண்டு. 1, தொடர்ச்சியாக மூன்று முறை எமது குறும்படப் பயிற்சிப்பட்டறைகளுக்கு சிறப்புவிருந்தினராக அழைப்பட்டு / வந்து அதன் பழக்கத்தினால் என்ன பாரதிவாசன்! எப்படியிருக்கீங்க? என்று கேட்கின்ற அளவிற்கு என்னோடு தோழமை பாராட்டும் ஜனநாதன் அவர்களின் படம். 2, இயற்கை, ஈ போன்ற பிரமாண்டமான படங்களைக் கொடுத்து நல்ல திரைப்பட எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டிருக்கிற இயக்குநரின் படம். 3. ட்ரெயிலர் வெளியீட்டுவிழாவுக்குச் சென்றுவநத அரசு, அந்த ட்ரெயிலர் பார்த்து வியந்து/ மிரட்டியிருக்கார் ஜெனநாதன் என்று ஓகே சர்டிபிகேட் கொடுத்த படம். இதற்கெல்லாம் மேலாக நவம்பரில் திருப்பூரில் நடைபெறவிருக்கும் குறும்படவிழாவிற்கு ஜெனநாதனை அழைக்கத் திட்டமிருப்பதால் / அவரிடம் பேசும்போது பேராண்மை பற்றிபேச வேண்டும் என்கிற காரணம்.....இப்படியான காரணங்களினூடே.. இரண்டுநாள் தீபாவளி விடுமுறையில் / தொலைக்காட்சி பார்த்து வெறுத்துப்போய் (போரடிக்குது. எங்காவது கூட்டிட்டுப்போங்களேன் என்று மகனும், மனைவியும் கூற) பேராண்மைக்குப்போக திட்டமிட்டேன். பேராண்மை ஓடும் திரையரங்கிற்கு அருகிலுள்ள இன்னொரு திரையரங்கத்தில் ஆதவன் ஓடிக்கொண்டிருந்தது.( காலையிலேயே குறுஞ்செய்தி வந்துவிட்டது. ஆதவன் ஊத்திக்கிச்சு. பேராண்மை தப்பித்துவிட்டது என்று. அனுப்பியவர் / நண்பர் சக்தி) மகனிடம்(14வயது), டிக்கெட் முன்பதிவு செய்து வா என்றேன். அப்பா! ஆதவன் போகலாம் என்றான். வேண்டாம் பேராண்மைக்கு எடுத்துவா பிறகு பார்க்கலாம் என்றேன். டிக்கெட் எடுத்துவந்தான். அப்பாவுக்கு வேறவேலையே இல்லை. படம் பார்ப்பதுகூட அவர் விருப்பப்படிதான் பார்க்கணும்.. எப்படியோ போரடிக்க வைக்கப் போகிறார். என்று மனைவியும் மகனும் முணுமுணுத்துக்கொண்டனர். ஆனாலும் படம்பார்க்கிற வாய்ப்பை இழக்கவேண்டாமே என்று புறப்பட்டனர். இரவுக்காட்சி. இரண்டாவது ஆட்டம். தீபாவளிக்கு அடுத்த நாளாதலால் கூட்டம் அதிகமா இருக்கும் என்று இரவு உணவு முடிக்காமலேயே 9,30 க்கு திரையரங்கம் சென்றுவிட்டோம். எதிர்பார்த்த கூட்டமில்லை.( பல மாவட்டங்களிலிருந்து வேலைக்காக திருப்பூர் வரும் மக்கள் தத்தமது சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் கூட்டம் குறைவாக இருந்தது) பால்கனி நிறைந்தது. அதற்கு கீழுள்ளவைகள் பெரும்பாலும் காலியாகத்தான் இருந்தது. படம் துவங்கியது. தமிழ்சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டுசெல்வதாகக்கூறி, நாடகபாணி முகப்பூச்சுகளிலும், கிராபிக்ஸ் ஜோடனைகளிலும், நவீனங்களை ஜகன்மோகினி பாணிப்படங்களுக்கும பயன்படுத்திவருகிற தமிழ்சினிமா தளங்களில் உண்மையிலுமே ஒரு உலகத்தரம்வாய்ந்த படமாக பேராண்மையை நிரூபித்திருக்கிறார் ஜெனநாதன். இடஒதுக்கீட்டின் பயனாக ஒரு பழங்குடியின மாணவனாக படித்து, பாரஸ்ட் ஆபீஸராக உயர்வுபெற்ற துருவனாக (அமுல்பேபி கதாநாயகனாகவே மற்றபடங்களில் பார்த்து சலித்துப்போன ஜெயம் ரவி) வாழ்ந்துள்ளார். பாத்திரத்திற்காகவே தன் உடலைவருத்தி மெலிந்து, கன்னமெல்லாம் ஒடுங்கி.... உலகநாயகனென்ன எல்லா நாயகன்களும் ஈடுபாட்டுடன் நடிக்கத்துவங்கினால் இப்படித்தான் மாறிப்போவார்கள். நல்ல மாற்றம். வேகமான திரைக்கதை. வாழைப்பழத்தில் ஊசியாய் மார்க்ஸிய வசனங்கள். அற்புதமான இடத்தேர்வு. ஆங்கிலப்படத்திற்கிணையான படப்பிடிப்பு, மற்றும் படத்தொகுப்பு. பிரமாண்டத்தின் உச்சமாய்... பேராண்மை. மூலதனம் உள்ளிட்ட மார்க்ஸிய தத்துவங்கள் படிக்கிற கதாநாயகன், மேல்சாதிதிமிர்பிடித்த மாணவிகள், உலகமே கவனித்துக்கொண்டிருக்கிறது. தமிழன் ஜெயித்தாக வேண்டும், போன்ற கூர்மையான / பூடகமான வசனங்கள் என... தமிழ் சினிமாவின் பயணத்தில் ஒரு மைல்கல்லாக மலர்ந்திருக்கிறது, பேராண்மை. சின்னச்சின்ன குறைபாடுகள் அங்கங்கே தலைகாட்டினாலும் / (லாஜிக்) மொத்தத்தில் நிறைவான / ஒரு இனிய அனுபவத்தை நம்முள் வீசிச்செல்கிறது, பேராண்மை. வேகமான திரைக்கதைக்காக கல்யாணக்குமாரைப் பாராட்டலாம். அடர்ந்த காடுகளுக்குள் நம்மை மெல்லமெல்ல இழுத்துச்செல்லும் வித்யாசாகரின் பிரமாண்ட இசையைக் கொண்டாடலாம். கரடுமுரடான மரம்,மலைகளில் நம்மை அழைத்துப்போகும் கேமராவிற்காக சதீஸ்குமாரை மெச்சலாம். இருக்கையின் நுனிவரை இழுத்துப்போன படத்தொகுப்பிற்காக தொகுப்பாளர்களையும் கைகுலுக்கலாம். மொத்தத்தில் இவர்களை ஒருங்கிணைத்து/ படத்தை இயக்கிய ஜனநாதனை வாழ்த்தலாம்...வரவேற்கலாம்...தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடலாம். வெளிநாட்டுப்படங்களைப்பார்த்து / காப்பியடித்து படம் பண்ணும் இயக்குநர்களுக்கு மத்தியில், Boris Vasilyev எனும் ரஷியநாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் என மானசீகமாய் டைட்டில்கார்டு போட்டு / துவங்கும் நேர்மை இயக்குநர் ஜனநாதனைத்தவிர யாருக்கு வரும்? உலகநாயகர்களும் ஆஸ்கர்நாயகர்களும் (அதுக்கும் வழியின்றி / ஏ.ஆர்.ரகுமான் வாங்கிவிட்டார்) அங்கலாத்துப்போகும்படி, அல்லது அவரை அண்டி/ அவருக்குத்தூபம் போடும் முற்போக்குவாதிகளும், இந்தப்படத்தை எப்படிக்கொண்டாடப்போகிறார்களோ... இதென்ன படம்..! குப்பை! என்று ஓரங்கட்டப்போகிறார்களோ... ஊமைகண்ட கனவாய் வாய்மூடி மெளனித்திருக்கப்போகிறார்களோ.. அல்லது நம்மைவிட நன்றாக செய்திருக்கிறார்கள் என்று கொண்டாடப்போகிறார்களோ.... பார்ப்போம். படம்முடிந்து வெளியேறிய போது மகன்கூறினான், அப்பா..அப்பா.. இன்னொருவாட்டி இந்தப்படத்துக்கு வரலாம்பா.. படம் சூப்பரா இருக்கு என்றான். மனைவியும் அதை ஆமோதிப்பதுபோல் இருந்தாள். பேராண்மையைவிட ஆதவனுக்குப்போகலாம் என்றுசொன்ன இருவர் மனதிலும் பேராண்மை பெற்ற மதிப்பே, படத்தின் வெற்றியாய்ப் பட்டதெனக்கு. சரியென்றபடி... இருசக்கரவாகனம் எடுத்து வீடுநோக்கி நகர்ந்தோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக