
இன்று பிறந்தநாள் காணும் இன்னாருக்கு (அவருடைய கைபேசி எண்ணுடன்) ஒரு வாழ்த்துச்செய்தி சொல்லுங்களேன்/ (அனுப்புகிறவரும் யாரென்று தெரியாது. வாழ்த்த வேண்டியவரையும் யாரென்று தெரியாது.) இப்படியெல்லாம் சம்பந்தா சமபந்தமில்லாது வரும் குறுஞ்செய்திகளுக்கு மத்தியில், திருப்பூரின் சிபிஎம் தோழர் கே,எஸ்.கே யின் மரணசெய்தி நேற்று குறுஞ்செய்தியாக வந்தது. (உண்மையில் கைபேசியின் பயன்பாடு இப்போதுதான் தெரிகிறது) கிட்டத்தட்ட 80களின் பிற்பகுதியில் (14வயது எனக்கு) காங்கிரஸையும், திராவிடக்கழகங்களையும் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு, பொதுவுடமைக்கட்சி பற்றி தெரியும் போது முதலில் அறியப்பட்ட பெயர் கே.எஸ்.கே. என்று அழைக்கப்படும் கே.எஸ்.கருப்பசாமிதான். தெற்குப்பகுதியில் குப்புசாமியும், பொதுவாக கே.எஸ.கே வுமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறியப்பட்டது. 76 வயதான கே.எஸ்.கே. நேற்று முன்தினம் மரணமடைந்தார். இன்றிருக்கிற சிபிஎமிற்கும் / பழைய சிபிஎம் க்கும் ஏணிவைத்தாலும் எட்டாது. அப்போதெல்லாம் எங்குநோக்கினும் செஞ்சட்டைகளாகவே இருக்கும், கட்சிக்கூட்டங்களிலிருந்து மாநாடுகள் வரை. இன்று முதலாளித்துவ பண்போடு/ குட்டிமுதலாளிகளாக பொருப்பாளர்களெல்லாம் மினிஸ்டர் வெள்ளையிலும், நடுநிலைப்பொருப்பாளர்களெல்லாம் பலவண்ணங்களிலும், கடைமட்ட ஊழியன் மட்டும் (கடைமடட ஊழியன் எங்கே... ஏகதேச தோழர்களெல்லாருமே ரியல்எஸ்டேட் அதிபர்களாகி விட்டனர்) சிகப்பு வண்ண சட்டையுமாக இருக்கின்றனர். காலம் நிறைய மாறித்தான் போயிவிட்டது. பழைய சிபிஎம் காரர்களிலேயே முகம் மறந்துபோன எவ்வளவோ பேருக்கு மத்தியிலும் கே.எஸ.கே. பெயரும் நினைவும் இன்னும் மனதில் வட்டமிட, புதியவர்களால் ஓரங்கட்டப்பட்ட ஒரு உண்மையான மார்க்சிஸ்ட் தோழரின் மரணசெய்தி வருத்தமாகத்தான் இருக்கிறது. இறுதியஞ்சலி, இறுதி ஊர்வலத்தோடு இவரின் தியாகங்களும் எரியூட்டப்பட, இனி அவர் புகைப்படங்களில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக