திங்கள், 2 மார்ச், 2009

காதலெனில் (காதல் கவிதைகள்)

சமர்ப்பணம்…

“என்னை
காதலித்தவர்களுக்கும்,
என்னால்
காதலிக்கப்பட்டவர்களுக்கும்…”

O….01

பிப்ரவரி 14ஐ
கொண்டாடிக்கொண்டிருக்கும்
காதலர்கள் நாம்.
உன் கணவனோடு நீயும்..
என் மனைவியோடு நானும்.

O

யாதெனில் (கவிதைத் தொகுப்பு) 

O

சமர்ப்பணம்…

“உலகமெங்கிலும்
அகதிகளாய்
பரவிக்கிடக்கிற
என்
தமிழ் மக்களுக்கு…”

O………………….01

சலனமற்ற குளத்துநீரில்
கல்லெறிந்து போனவள்
நீ.
இன்னும்
அல்லாடிக் கொண்டிருக்கிறது
பரிதாபத்திற்குரிய என் பிம்பம்.

O………………….02

புகைப்படம் சொல்லியது
நம் இருவருக்கும்
இடைவெளி குறைவென்று.
நாட்குறிப்பிலும் கவிதைகளிலும்
இறைந்து கிடந்தன
நம் வாழ்வின் மிச்சங்கள்.
நிகழ்வுகளெல்லாம்
இறந்த காலத்திலேயே தங்கிவிட
அலைகிறது மனசு
இன்னொரு புகைப்படத்திற்காக.

O………………….03

இனி என் யதார்த்தங்களை
கரையான்கள் அரிக்கும்.
எனது மௌனம் கூட
பிறறைத்துன்புருத்தும்
அல்லது
திட்டும் வார்த்தைகளாய்
உருவகப்படுத்தப்படும்.
என் வாழ்க்கைக்கும்
சந்தோசங்களுக்கும் இடையில்
சிலந்தி வலைபின்னும்.
ஓடி விளையாடும்.
கண்களில் மிஞ்சும் கண்ணீர்.
நிழல்கொடுக்கும் மரங்களின்கீழ்
எனது இளைப்பாறல்கள்.
வெப்பம் இறங்கி இறங்கி
கிளைகள் எங்கிலும் தீபரவும்.
சாதகமும் சோசியமும் துரோகம் செய்ய
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கூட
நான் அன்னியனே.
மனசின் தீர்மானங்களும்
விரக்தியின் வெறுப்பும்
செழுமைப்படுத்தும் என்னை.
நாளைய பொழுதுகளில்
நம்பிக்கை மட்டுமே வாழ்க்கை. 

O………………….04

மௌனமே
ஒரு மொழிதான்.
அதற்காக
மொழிகளையே
மௌனமாக்கிவிட்டால்
எப்படி?

O………………….05

பாதை நெடுகிலும்
மனித பொம்மைகள்,
பரிதாபமாக.
சுயமிழந்து நடைபிணமாய்
அவரவர் அவரவர் போக்கில்.
யாரும் யாருடைய சுமைகளையும்
தாங்கிக்கொள்ள முடியாது.
அவரவர் சுமைகள்
அவரவர்க்கு மிகைப்படும்.
ஆனாலும்….
பகிர்ந்து கொள்ளலாம்.
நம் கவலையை அவர்களோடும்
அவர்கள் பிரச்சனையை நம்மோடும்.

O………………….06

கனவுகளில் மட்டுமே தணியும்
என் காமம்மெல்ல.
பகலிலும்கூட உறங்கத்துடிக்கும்
கண்கள்-அதுவிரும்பியே.
பாதிக்கனவில் உறக்கம் கலைய
படபடத்துக்கொள்ளும் மனசு.
நீண்டிருக்கக்கூடாதா…
அந்த உறக்கமும் கனவும்.
அப்புறம்…அப்புறம்…
படுக்கையின் மீதுபரவும்
தீநாக்கு.
மெல்லநெளிந்து கால்மடக்கி
கூனிக்குறுகி உறங்க நினைக்கையில்
கிழக்கை வெளுக்க
கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும்
ஒற்றைக்கால் தூக்கிய சேவல் ஒன்று,
சாம்பல் மேட்டில்.

O………………….07

பார்க்கத்துடிக்கிறது மனசு,
தினமொரு முறையாவது
உன்னை.
பங்குகொள்ளவே விருப்பம்
உன் சந்தோசங்களிலும்
துக்கங்களிலும்.
நீயும் அப்படியே எனில்
மகிழ்வேன்.
காதல் சொல்லாமல்.. 

 
O………………….08

மறந்துவிடத்தான் போகிறோம்
அனைத்தையும்.
மறக்கக்கூடாதென்பதும்
மறக்க வேண்டாமென்பதும்
விருப்பமாயினும்
மறந்துவிடுவது இயல்பு.

O………………….09

என் சலனங்களை வென்றது
உன் எதார்த்தம்.
இனி மெளங்கள் மட்டுமே
பேசும் நமக்குள்.

ஆனாலும்
பார்த்துக்கொண்டிருப்போம்
நிறைய நேரம் மனதால்.

எதன் எதிர்பார்ப்பில் இது..
தேடிக்கொண்டுதானிருக்கிறேன்
நானும்,
உன்னில் கசியும் எனக்கான
உன் சினேகத்தை.

O

தூக்கம் சிதைக்காத 
கனவுகள் கொடு. 
மெளனம் கலையாத 
காதல் தருகிறேன். 
கொடுத்துப்பெறுவதைத்தவிர 
வேறென்ன இருக்கிறது 
காதலில்?

1 கருத்து: