ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

''பச்சைரத்தம்'' ஆவணப்படம்...


தோழர் ஒருவரிடம் கொடுத்தனுப்பி, கிட்டத்தட்ட ஒன்றை மாதங்களுக்குப்பின் என் கைகளுக்குக் கிடைத்தது -கோத்தகிரியைச் சேர்ந்த தோழர் தவமுதல்வனின் ''பச்சை ரத்தம்'' ஆவணப்படம். இன்று பார்த்தேன்.. ஆவணப்படமுயற்சியே மிகக் குறைவாகிப் போன( ஆவணப்படத்திற்கு நிறைய உழைக்கணும்... மெட்டீரியல் தேடி அலையணும்... குறும்படம்னா.... ஒரு இடத்தில் உட்கார்ந்து - கதை தயார் பண்ணி - படமும் எடுத்து, சீக்கரமே ஒரு (குறும்பட) இயக்குநர் ஆகிவிட முடியும்) இன்றைய சூழலில்... இவரின் முயற்சி உண்மையிலுமே வரவேற்கத்தக்கதே... மலையகத் தமிழர்கள் குறித்த ஆவணம்...முன்பகுதியில் - வேலைக்(அடிமைக்)கூலிகளாக இலங்கை அழைத்துச்செல்லப்பட்ட மலையக தோட்டத்தொழிலாளர்கள் பின் அங்கிருந்து..இனப்பாகுபாடினால் துரத்தியடிக்கப்பட்டு - அவர்கள் தமிழகத்தில் ஊட்டி, வால்பாறை, தேனி போன்ற பகுதிகளில் தேயிலை, காப்பித் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டதும்...இன்றுவரை - கொத்தடிமைகள் போல நடததப்படுவதும் குறித்தான பதிவு... நாம் தினமும் அருந்துகிற காப்பி, தேநீரில்... அந்தத்தொழிலாளிகளின் ரத்தத் துளியும் கலந்திருக்கின்றன.... என்பதாக 'பச்சைரத்தம்' பேசுகிறது.

சனி, 28 ஆகஸ்ட், 2010

வினயா ஒருபெண் காவலரின் வாழ்க்கைக்கதை/நூலரங்கம்



நளினிஜமீலா நிகழ்ச்சியன்றே திட்டமிட்டது தான் வினயாவின் நூல் குறித்த அறிமுக நிகழ்வை திருப்பூரில் நடத்தவேண்டும் என்று. இரண்டுமூன்று மாதங்கள் கழித்து வைத்துக்கொள்ளலாம் என்பதும் முன்னமே முடிவானதுதான்.
(பொருளாதாரப் பிரச்சனை தான்) கிட்டத்தட்ட ஜூன் முதல்வாரமே கோழிக்கோடில் உள்ள வினயாவிடம் பேசினோம் ( மொழிபெயர்ப்பாளர் யூசுபிடம் கைபேசி எண்வாங்கி) வருவதாக ஒப்புக்கொண்டார்கள். அதேபோல் தமிழ் மொழி பெயர்ப்பாளரையும் அழைப்பதென்று அவரிடமும் பேசினோம். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டார். அப்புறம்தான் தேதியும், இடமும் உறுதியானது. இந்த நேரத்தில் த.மு.எ.க.ச. ஈஸ்வரனையும் நன்றியுடன் குறிப்பிடவேண்டும். இப்படியான ஒரு நிகழ்விற்கு ஏற்பாடுள்ளது. முடிந்தால் உங்கள் ( கே.ஆர்.சி.சிட்டிசென்டர்) இடத்தைக் கொடுங்கள். அல்லது குறைந்த வாடகைக்கு ஒரு,இடத்தை பரிந்துரைசெய்யுங்கள் என்று கேட்டபோது, இரண்டொரு நாள் கழித்து நம்ம இடத்திலேயே வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அப்பாடா.... அரங்கிற்கான பெரும் செலவுகுறைந்தது என்று மகிழ்ந்தோம். அடுத்து சென்னை வழக்கறிஞர் வடிவாம்பாள்(த.ஓ.வி.இ) பொள்ளாச்சி ஆசிரியை மணிமுத்து என ஒவ்வொருவரையம் உறுதிப்படுத்தினோம். துண்டறிக்கை தயாரானது. நீண்டநாளாகிவிட்டமையால் நிகழ்வன்றே பதியம் இதழையும் கொண்டுவந்துவிடலாம் என்ற மருத்துவர் சண்முகநாதனின் யோசனையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகளும் துவங்கியது. இதற்கிடையில் மகேஸ்வரி புத்தக நிலைய மகாதேவன் நிகழ்வில் தன்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று 2000ரூபாய் தந்தார். பதியம் / மகேஸ்வரி புத்தக நிலையம் இணைந்த நிகழ்வாகவே ஏற்பாடுகள் நடைபெற்றன. கிட்டத்தட்ட நிகழ்வின் ஒருபகுதி செலவை மருத்துவரும் ஒருபகுதி செலவை நானும் ஏற்றுக்கொள்வதாக முடிவானது. (யாரிடமும் காசுகேட்பதான திட்டமில்லை. கேட்டாலும் தருணுமே) தோழர் தமிழ்நேயன் வாயிலாக எதிர் பதிப்பகத்திலிருந்து ( வினயாவின் புத்தகம் எதிர் வெளியீடு) 10 புத்தகம் வாங்கி வந்திருந்தார். அதை, வாசிக்கிற நண்பருகளுக்கு கொடுத்து (காசுக்குத்தான்) படித்துவிட்டு நிகழ்விற்கு வர பணிந்திருந்தோம். நல்ல வரவேற்பிருந்தது. படித்துவிட்டு புளகாகிதமடைந்தனர் சிலநண்பர்கள் °உண்மையிலேயே ஒரு நல்ல நிகழ்வைத்தான் திட்டமிட்டிருக்கிறீர். அற்புதமான சுயசரிதைநூல். ஒருபெண் காவலரின் கதை... துறைசார்ந்து அவர்கள் எதிர்கொண்ட போராட்டமென தமிழில் நினைத்தும் பார்க்கமுடியாத/ மலையாளத்தில் மட்டுமே சாத்தியப்படுகிற விசயமிது° என்று கூறினர். நிகழ்ச்சியின் வெற்றி அன்றே தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக உணர்ந்தோம்.
அதிலும் கூட சில நண்பர்கள் °அதென்னங்க கேரளாவிலிருந்தே அதுவும் பெண்களாகவே அழைத்துவந்து புத்தக அறிமுகவிழா நடத்துகிறீர்? ° என்றும் கேட்டனர். நல்ல வித்தியாசமான படைப்புகள் எங்கிருந்தாலும் அறிமுகப்படுத்த வேண்டியதுதானே சரி என்றோம்.
18.07.10 ஞாயிறு மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி. யூசுப் தவிர்க்கமுடியாத காரணத்தால் வரஇயலவில்லை என்று முன்னமே கூறிவிட்டிருந்தார். சனிக்கிழமை இரவே வினயா, அவரது தோழிகள் மரியா, லிசி ஆகியோர் வந்துவிட்டனர். அவர்களை விடுதியில் தஙகவைத்தோம். காலை அவர்களுடனே காலை சிற்றுண்டி. வினயாவும், லிசியும் மலையாளத்திலும், மரியா ஓரளவிற்கு தமிழிலும் உரையாட.... நான் தமிழிலேயே அவர்களுடன் கதைச்சேன். திருப்பூர் குறித்தும், இங்கு வந்து தங்கி பனியன் கம்பனிகளுக்கு பணிக்குச்செல்லும் பெண்கள் குறித்தும், அவர்களுக்கான °பாதுகாப்பு° குறித்துமான நிறைய விசயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். (என் தமிழ் அவர்களுக்கும், அவர்களின் மலையாளம் எனக்கும் புரிந்திருந்தது. ஆனால் நாங்கள் அனைவருமே த்த்தமது மொழிகளில் பேசிக்கொண்டோம்.)
சிற்றுண்டி முடித்து என் அலுவலகம் வந்தோம். வந்ததும் மரியாவும், வினயாவும் எனது நூலகத்தில் புத்தகங்களை ஆர்வமுடன் பார்வையிட ஆரம்பித்தனர். ( குறிப்பாக கவிதாசரண் வெளியிட்டிருந்த முத்துக்குமாரின் மொத்த கவிதைத்தொகுப்பை ஆர்வமுடன் எடுத்துச்சென்றனர்,காசுகொடுத்து.) முத்துக்குமார் குறித்தும், அவனது ஈழத்திற்கான ஈகம்குறித்தும் நான் கூறியிருந்தது அவர்களை ஈர்த்திருக்கவேண்டும். அதில்ஆர்வமாகிவிட்டனர். மரியா கொஞ்சம் தமிழ்படிப்பாராம். வினயா முயற்சித்துக்கொண்டிருக்கிறார். பதியம் வெளியீடுகளையெல்லாம் அன்பளித்தேன். பின் திருப்பூரை சுற்றிப்பார்த்து விட்டு மாலை நிகழ்விற்கு வந்துவிடுவதாகச் சொல்லிச்சென்றனர்.
நல்ல முதிர்ச்சியான பெண்ணாகத்தான் பரிணமித்தார் வினயா. நிறைய பொதுவிசயங்கள் குறித்து பேசுகிறார். பெரிய அரசியல் பார்வை இல்லையெனினும் பெண்கள் குறித்தான, அதுவும் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்தான செய்திகள் தான் நிறைய உள்வாங்கியிருக்கிறார். ஆணகளுக்கு நிகரான அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் என்பதே அவரின் போராட்டமாக இருக்கிறது. நீ பேன்ட் சர்ட் அணிந்தால் நானும் அணிவேன். நீ புகைபிடித்தால் நானும் பிடிப்பேன். நீ மதுஅருந்தினால் நானும் மது அருந்துவேன். அதென்ன உனக்கு மட்டும் ஒரு நியாயம் எனக்கு ஒருநியாயமா... என்பதாகத்தான் இருக்கிறது. மருத்துவர் சண்முகநாதன் சொன்னதுபோல, எந்தவொரு தத்துவார்த்தங்களுக்குள்ளும் சிக்காமல், பெண்ணியம் குறித்து அக்கறைப்படும் ஒருவராகத்தான் அவர் இருக்கிறார்.
மாலை மணி 6 ஆகிவிட்டிருந்தது. புத்தகம் குறித்துபேசுபவர்களைத்தவிர பார்வையாளர்கள் வேறுயாருமே இல்லை. சண்முகநாதன் °என்னங்க, மக்கள் வந்துருவாங்களா?° என்றார். கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது. இவ்வளவு நல்ல ஒருநிகழ்வு. 100 நூல் அஞ்சல் அழைப்பு, 75 அஞ்சலட்டை அழைப்பு, 200 குறுஞ்செய்தி அழைப்பு, 100 சுவரொட்டிகள், உள்ளூர் பத்திரிகையின் இன்றைய நிகழ்ச்சி செய்தி, 50 கைபேசி அழைப்பென.... இவ்வளவு பண்ணியும் மக்கள் வரவில்லையென்றால்... பயம்கொஞ்சம் தொற்றிக்கொள்ள, °எவ்வளவுபேர் வந்தாலும் சரி 6.30 மணிக்கு நிகழ்வைத் துவங்கிவிடவேண்டியது தான்° என்று சொல்லிவிட்டு, காத்திருந்தோம். 6.30க்கு நிகழ்ச்சி துவஙகும்போது 50 பேர் இருந்னர். துவங்கி அரைமணிக்குள் மக்கள் வரத்துவங்கினர். மணிமுத்து தலைமையேற்றார். செந்தில்முருகன் வந்தவர்களை வரவேற்றார். சண்முகநாதன், வழக்கறிஞர் வடிவாம்பாள், இளங்கோவன், சிவகாமி, இளஞாயிறு, ஜெனீபர் உள்ளிட்டோர் °வினயா/ஒரு பெண்காவலரின் வாழ்க்கைக் கதை° நூல்குறித்த தங்களின் பதிவுகளை பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சியின் இடையே பெரியவர் ஒருவர் என்னை அழைத்து 7,30 மணிவரை அவரை(வினயா)ஆண் என்றே நினைத்துவிட்டேன் என்றார். (வினயா அணிந்திருந்த உடை, பேண்ட், சர்ட், மற்றும் ஆண்கள் போலவே தலைமுடியும் வெட்டியிருந்தார்) சிரித்துக்கொண்டேன்.
நிகழ்வின் இறுதியாக நான் வினயாவை அறிமுகப்படுத்தி வைக்க, வினயா சிறிதுநேரம் மலையாளத்தில் பேசினார். அவர் சந்தித்த பிரச்சனைகள், அதற்காக காவல்துறையில் உள்ள ஆண்களால் பட்ட அவமானங்கள், எதிர்கொண்டவிதம், என பகிர்ந்துகொண்டார்.( மரியா தமிழில் மொழிபெயர்த்துக்கூறினார்) தொடர்ந்து, கலந்துரையாடல்.
நீங்கள் ஏன் ஆண்கள்போல உடையணிந்து, முடிவெட்டியிருக்கிறீர்கள்? ( அந்த பெரியவரே தான்)
அது என் இஷ்ட்ம். என்ன உடையணிய வேண்டும் என்பதை தீர்மானிப்பவள் நான் தான். நீங்களல்ல( ஆண்களல்ல) வினயா ஒரு காவலர் என்றால், அது குறித்து மட்டும் பாருங்கள். அவள் என்ன உடையணிந்திருக்கிறாள், என்ன உடையணிய வேண்டும் என்பதெல்லாம் உங்களுக்கு (ஆண்களுக்கு)வேண்டாத வேலை. இப்படியாக கலந்துரையாடல் போய்க்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 150 பேர். நிறைவான கூட்டம். அவர்களுக்கும் நிறைவு. முதன்முறையாக இந்த புத்தகம் குறித்தான நிகழ்வு, தமிழகத்தில் இதுதான் என்று நன்றி பாராட்டினர். மகிழ்வாக இருந்தது. ஒரு நல்ல புத்தகத்தை/ படைப்பாளியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்கிற மன நிறைவுடன் அறைக்குத்திரும்பினோம். எதிரில் தோழர் தமிழ்நேயனுடன் வினயா சிகரெட் பிடித்தபடி வந்துகொண்டிருந்தார். அதிர்ச்சியெல்லாம் ஒன்றுமில்லை. °மன்னிக்கணும். அப்படியே ரிலாக்ஸாக வெளிவந்தோம். ஒரு தம் அடிக்கலாமென்று° என்றார், வினயா.
°நீங்க மன்னி்க்கணும். நாங்க ரிலாக்ஸா பீர் சாப்பிட்டுவிட்டு வந்தோம்° சண்முகநாதன்.
சிரித்துக்கொண்டே கைகுலுக்கிக்கொண்டோம். அன்பும், நன்றியும் வாழ்த்தும், தோழமையும் சமபகிர்தலும் நிரம்பிவழிந்தன கைகுலுக்களில்.

சனி, 13 மார்ச், 2010

நளினி ஜமீலா / ஒருபாலியல் தொழிலாளியின் சுயசரிதை/ பதிவும் பார்வையும்



2010 சர்வதேச பெண்கள் தினத்தை வித்யாசப்படுத்திக் கொண்டாட வேண்டும் என்பதே நமது நீண்ட நாளைய எண்ணமாக இருந்தது. இதிலென்ன வித்தியாசம்... பாலியல் தொழிலாளர்கள் குறித்த நிகழ்வாக / திட்டமிட்டோம். 07/03/10 மாலை பதியம் ஒருங்கிணைத்திருந்த மகளிர் தின நிகழ்வில் வரவேற்புரையாக.... நான்.



ஞாயிறு, 15 நவம்பர், 2009

மகளிர் மன்றங்கள்

நண்பர் விநாயகமூர்த்தி அழைத்ததனால் / திருப்பூர் மகளிர் மன்றம் நிகழ்விற்கு போகேவண்டியதாகப்போனது. ஆண்டுவிழா நிகழ்வு. பாட்டு, பேச்சு, நடனம் (நல்லவேளை சினிமாபாடல்கள் இல்லை) தனிநபர் நடிப்பு, கவிதை, ஓவியம், மற்றும் குறும்படம் என பலபோட்டிகள். என்னை அழைத்தது தனிநபர் நடிப்பு, மற்றும் குறும்படத்திற்கா ன தேர்வுக்குழு / நானும் விநாயகமூர்த்தியும். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக திருப்பூரில் இயங்கிவருகிற அமைப்பாம் மகளிர் மன்றம். எனது 10வதுவயதில் துவங்கியிருக்கவேண்டும். இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போதுதான் எனக்கு தெரிந்தது. எல்லாம் வெள்ளைவெள்ளையான பெண்கள்.(வெள்ளைக்காரிகள் அல்ல) கிட்டத்தட்ட சேட் பெண்களாக இருக்க வேண்டும்.(90 சதவீதம். 10 சதவீதம் மற்றபெண்கள்) ஆங்கிலம் முழுமையாகவும் போனால் போகிறதென தமிழும் கொஞ்சம்,,கொஞ்சம்… அந்த அமைப்பிலுள்ள 30பேரில் 20 பேர் வநதிருந்தனர். நடுவர்களாக 15பேர்.(என்னை உட்பட) பங்கேற்பாளர்கள் 20, 25 பேர். அப்புறம் காலிசேர்கள் தான். திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிற லேடீஸ் கிளப் மாதிரிதான் தோன்றியது. இப்படியான லேடீஸ்கிளப்பை இப்போதுதான் பார்க்கிறேன். ஒரே ஆட்டம், பாட்டு, கூத்துதான். ஒருசில பெண்களே எல்லா போட்டிகளிலும் பங்கெடுத்துக் கொண்டனர். நல்லவேளை… அமைப்பினர் யாரும் ஆடவுமில்லை. பாடவுமில்லை. (பின்ன… அவ்வளவு பெரிய உடம்ப வெச்சுட்டு ஆடிப்பாட முடியுமா என்ன..) வெள்ளைத்தோல் மட்டும்தான். மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை. ஆளுக்கொரு கைப்பை. விலையுயர்ந்த ஜிகினா புடவைகள்.. அது விலகுவது கூடதெரியாது நிகழ்ச்சி மதப்பில்( நார்த் இன்டியன்ஸ் அப்படித்தானே இழருப்பார்கள்…) இருந்தார்கள். பள்ளிமாணவிகள் தான் அதிக நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டனர். எந்த நிகழ்வையும் அமைப்பினர் கண்டதாகத் தெரியவில்லை. சம்பரதாயமான நிகழ்வுகள்.. போட்டிகள்… அதற்கு நடுவர்கள்… (நானும்தான்) எனக்கான முறை வந்தது… முன்னப்பின்ன செத்திருந்தாத்தானே சுடுகாடு தெரியும்..? எப்படி தீர்பெழுதுவதென்றே தெரியவில்லை. 5 தலைப்புகள். ஐந்தும் பெண்கள் சார்ந்ததே! பெண் தொலைக்காட்சிபார்ப்பதும், துவையல் அறைப்பதும், கணவன், அம்மா, மாமியார், நண்பர்கள்… பின்னமர… எப்படி வாகனம் ஊட்டுவது…. இப்படியான தலைப்புகள் தான். அதற்கு அவர்கள் நடித்துக்காட்டவேண்டும்…. அப்பா சாமி…. கொன்றெடுத்துவிட்டார்கள். தனிநபர் நடிப்பு என்பதுபோய்… எல்லாருமே ஒலிவாங்கியில் வசனங்களாக வாந்தியெடுத்தார்கள்…. (தொலைக்காட்சிகளின் தாக்கம்) இருப்பதில் சிறப்பு எனும் அடிப்படையில் தேர்வு செய்தோம். இறுதியாக பேசவந்த அந்த அமைப்பின் பொறுப்பாளர் … 32 வருடங்களாக பொதுசேவை செய்து வருகிறோம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு உதவிகள் செய்கிறோம்… சுனாமியால் இறந்தவர்களுக்கு செய்திருக்கிறோம். இலங்கைத்தமிழர்களுக்கு உதவியிருக்கிறோம்…. என்றெல்லாம் சொல்லிக் கொண்டேபோயினர். இந்த சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள பெணடகளின், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, எத்தனையோ பெண்களின் துயர்கூடதெரியாத இந்த மேட்டுக்குடி பெண்களின் டைம்பாஸை நினைத்து வருந்தினேன். தன் இனவிடுதலைக்காக களத்தில் நின்றுபோராடும் ஈழப்பெண்களையோ, உலகில் ஒவ்வொரு வினாடிகளிலும்… ஏமாற்றப்படுகிற… பாலியல்பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படுகிற… விலைமகள்களாய் விற்க்கப்படுகிற… கொத்தடிமைகளாக இருக்கிற… எத்தனையோ பெண்களின் வலியோ, வேதனையோ தெரியாது வாழும் இப்படியான பெண்கள் அமைப்பின் மீது வருகிற கோபத்தை என்னவென்று சொல்ல..? கணத்த மனதுடனே நிகழ்ச்சி முடித்து வெளிவர முடிந்தது.

சனி, 14 நவம்பர், 2009

லா ஸ்ட்ராடா (La STRADA)

la strada
உலகப்புகழ்பெற்ற படங்கள் பார்ப்பதற்கு / ஆங்கிலஅறிவோ அறிவிஜீவித்தனமான மண்டையோ வேண்டும் என்கிறதில்லை. பொறுமையும், படத்தை உள்வாங்கிக் கொள்கிற பக்குவமும், (ஆங்கிலம் தெரிந்திருந்தால் இன்னும்கொஞ்சம் ஆழமாக வசனங்களை உள்வாங்கிக்கொண்டு ரசிக்கலாம்) கொஞ்சம் சினிமாசார்ந்த தேடலும் இருந்தாலே போதும்.
இப்படித்தான் நான் வாங்கிவைத்திருக்கிற 150 படங்களில் ஒருசிலதையாவது பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவலில், எதையாவது பார்ப்பது என்றில்லாமல்/ குறைந்தது / நாம்பார்க்கின்ற படத்தின் கதையையாவது தெரிந்துகொண்டு படம் பார்க்கலாம் என்று நினைத்து, செழியனின் உலகப்படங்கள், எஸ்.ராமகிருஷ்ணனின் உலகப்படங்கள் சார்ந்த தொகுப்பு, எம்.ஜி.சுரேஷின் உலகம் போற்றும் திரைப்படங்கள் என சிலபுத்தகஙகள் சிலதை கையிலெடுத்துக் கொண்டு / புறப்பட்டேன்… இல்லையில்லை படம்பார்க்கத்தயாரானேன். மூன்று புத்தகங்களிலிருந்து தேர்வுசெய்து / 20 படங்களைத்தேர்வுசெய்து தினமும் ஒருபடம்வீதம் பார்ப்பதாகத்திட்டம்……
அப்படிதேர்வுசெய்யப்பட்டதில் முதல்படமாக அமைந்ததுதான்… லா ஸ்ட்ராடா (சாலை) 1954ல் பிரெடிகோ பெலினி எனும் இத்தாலிய இயக்குநரால் எடுக்கப்பட்ட நியோரியலிஸ்ட் வகையான படம். ஊர்ஊராக தனது மூன்றுசக்கர வாகனத்திலேயே சென்று சர்க்கஸ்காட்டிப்பிழைக்கும் ஜம்பனோ (ஆண்டனி க்வின்)வுடன் உதவியாளினியாக வருகிறாள், வயதுமுதிர்ந்தும் சிறுபிள்ளைத்தனமான மனோநிலையில் இருக்கும் ஜெல்ஷோமினா (ஜியுலெட்டா மாசினா…. இப்படத்தின் இயக்குநர் பிரெடிரிகோ பெலினியின் மனைவி) முரட்டுத்தனமான / சிர்க்கக்கூட காசுகேட்கும் கதாநாயகன்… அவனின் ஒவ்வொரு சின்னச்சின்ன செயல்களையும் கூர்ந்து கவனிக்கும் / ஏதோவொரு அவன்மீதான பிடிமானத்துடன் இருக்கும் நாயகி… இடையில் வில்லன் போல் வந்துசேர்கிற சர்க்கஸ்காரன் (ரிச்சர்ட் பேஸ்ஹ‌ார்ட்) என ஒரு சில கதாபாத்திரங்களுடன் நகர்ந்துசெல்லும் கதை…. இப்போது வேண்டுமானால் இவையெல்லாம் சாத்தியப்படலாம். 1950களின் பிற்பகுதியில் எடுக்கப்பட்ட படம்…. அற்புதமான பாத்திரப்படைப்புகள். கதையுக்தி. சர்க்கஸ்காரனை கோபத்தில் கதாநாயகன் அடித்துவிடுவான். எதேச்சையாக அவன் சுருண்டுவிழுந்து இறந்துபோவான்…. அதன்பின்னான… காட்சிப்பதிவு… அதுகாட்டுகிற மொட்டைமரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதி… வேகம்… என ஒரு விசை நம்மையும் (நம்மையறியாமலேயே) இழுத்துச்செல்லும். கதைநாயகியின் நடிப்பு.. வார்த்தைகளற்ற கவிதை. சிறிது மனம் பேதலித்தவளாயினும்… அவளுக்குள் இருக்கிற மென்மையான மனசு… சர்க்கஸ்காரனுடனான மெல்லப்பூக்கும் நேசம்(காதலல்ல) அவனால் அன்பளிக்கப்படுகிற டாலரை மாட்டுகிறபோதும், கூலாங்கல்லை வாங்குகிறபோம்… அவன் கொல்லப்படுகிபோது(நேரில் பார்த்து) பதறிப்போகிற போதும்… அதைநினைத்தே அழுதுஅழுது… நீ அவனைக்கொன்றுவிட்டாய் என தூக்கத்தில் புலம்பி… அப்பிரானியாக படுத்துறங்குகிறபோதும்… பபூனாக வேடமிட்டு கழைக்கூத்தில்.. கூத்தடிக்கிறபோதும்… என… நாயகனைக்காட்டிலும் நாயகியின் நடிப்பு நெகிழவைக்கிறது. விலைமாதுவிடம் நாயகன் கொஞ்சிக்குலாவும் போது உள்ளூர.. ஒரு ஆதங்கத்துடன் நெகிழ்கிற காட்சியும்.. நான்திரும்பவும் என்வீட்டிற்கே போகிறேன் என நாயகனிடம் வாதிடுகிற காட்சியும்… மனவெளிப்பாடு. நாயகனால் கைவிடப்பட்ட நாயகி, இறந்துவிட்ட செய்தியறிந்து/ நாயகன் படும் பாடுதான் படத்தின் உச்சகட்டம். முரட்டுத்தனமான அவனுள்ளும் இளகிய மனம் எப்படிவெளிப்படுகிறது… என்பதை நடிகரும்… அதை இயக்கிய இயக்குநரும் அற்புதமாக செய்திருக்கிறார்கள். 90 சதவீதக்காட்சிகள் வெளிப்புறத்திலேயே படமாக்கப் பட்டிருக்கின்றன. கருப்பு வெள்ளைப்படமாதலால் அதற்கேற்ப ஒளியமைப்புகள் பிரமாண்டப்படுத்தியது. விக்டோரியா டிசிகாவின் பைசைக்கில் தீப் நிறையமுறை பார்த்திருக்கிறேன்.. அதைக்காட்டிலும் இது புதிதுபுதிதாக வெவ்வேறு செய்திகளைச் சொல்லுவதுபோல் எனக்குத்தோன்றின. கிட்டத்தட்ட நான் பிறப்பதற்குமுன்பே வெளிவந்த ஒருதிரைப்படம்…. இவ்வளவு வருடம் கழித்து இப்போதான் நம்பார்வைக்கு வருகிறதென்றால் (நாம் தேடிப் போகாதது நம்குற்றமே) இன்னும் வெகுமக்களை இப்படியான படங்கள் சென்றுசேர்வதெப்போதோ… தெரியவில்லை. திரைப்படச்சங்கங்கள் இப்படியான படங்களை (கதைவிளக்கத்துடன்) திரையிட்டு / படம்குறித்து விவாதித்து மேலும் திரைப்பட ரசனையை மேம்படுத்தவேண்டும். அப்போதுதான் மாற்றுத்திரை எனும் வடிவம் வலுப்பெறும்….
(சில புரிதலுக்காக…..நன்றி.. எம்.ஜி.சுரேஷ்)

வெள்ளி, 13 நவம்பர், 2009

கவிதை


பார்க்கின்ற பொருளையெல்லாம்

தாள்களில் வரைந்துகாட்டும்

சின்னவனை மெச்சாமல்
யாரோ வரைந்த
ஓவியத்தில் இலயித்திருக்கிறேன்,
கண்மூடி.
“இன்னைக்காச்சும்
நேரமே வாங்கப்பா” என்கிற
பெரியவனின்
தொலைபேசிக் கட்டளையைக்கூட
கவனத்தில் கொள்ளாமல்
இலக்கியம், அரசியல் பேசி
இரவு நெடுநேரம் கழித்து
வீடு திரும்புகிறேன்
சோர்வுடன்.
“ஞாயிற்றுக்கிழமைகளிளாவது
எங்கேயாவது வெளியே
கூட்டிட்டுப் போங்களேன்” எனும்
மனைவியின் ஆசையிலும்
மண்ணள்ளிப்போட்டு
சுற்றித்திரிகிறேன்
நிறைய நேரம்.
தேடிக்கொண்டேயிருக்கிறேன்
வாழ்க்கையை
வெளியே
வீட்டில் தொலைத்துவிட்டு

கண்களை ஈரமாக்கிய ஒரு எஸ்.எம்.எஸ்

தனது புத்தம் புதுக்காரை அவர் துடைத்துக் கொண்டு இருந்தார்.
அருமை மகனோ கல்லைக் கொண்டு காரின் இன்னொரு பக்கத்தில் கிறுக்கிக் கொண்டு இருந்தான்.
கோபம் வந்த தந்தை மகனின் விரல்களைப் பிடித்து, கையில் கிடைத்தது ஸ்பானர் என்பது கூட அறியாமல் மாறி மாறி கோபத்தில் அடித்து விட்டார்.
ஆஸ்பத்திரியில் கட்டுப் போட்டு இருந்த தன் கையினைப் பார்த்து “என் விரல்கள் திரும்பவும் வளருமா, அப்பா” என்றான் மகன்.
அழுகையை அடக்கிக் கொண்டு வெளியே வந்த தந்தை காரைக் கால்களால் ஓங்கி மிதித்தார்.
மகன்காரன் காரில் கிறுக்கி இருந்த எழுத்துக்கள் அப்போது அவரைப் பார்த்தன.
“ஐ லவ் யூ டாடி”

பி.கு: தூத்துக்குடியிலிருந்து பொன்ராஜ் அனுப்பிய எஸ்.எம்.எஸ்ஸில் இருந்த குட்டிக்கதை இது. யார் எழுதியதோ தெரியவில்லை. காலையில் படித்தேன். சட்டென்று கண்கள் ஈரமாகின. நினைக்கும்போதெல்லாம் கலங்கிப் போகிறேன்

நன்றி :http://mathavaraj.blogspot.com/2009/10/blog-post_258.html